Sunday, January 30, 2005

புதிய அனுபவம்

இது வரை ஒரு உணவகத்தில் வேலை செய்த அனுபவம் என்பது எனக்கு இல்லை. அந்த குறையும் நேற்று நிவர்த்தியாகிவிட்டது. எனது அலுவலக நண்பன் பொழுதுபோக்கிற்காக ஒரு இசைக்குழுவில் இருக்கின்றான். அருமையாக கித்தார் வாசிப்பவன். எனக்கும் இசையில் விருப்பம் இருப்பது தெரிந்த அவன் அவனுடைய இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு என்னை அழைத்திருந்தான். நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஒரு இரவு உணவு விடுதி. ஜெர்மானிய பாரம்பரிய அம்சங்களோடு, அதாவது பியர், பியர், பியர் என விதம் விதமான பானங்களையும் ஜெர்மானிய பாரம்பரிய உணவு விரும்பி சாப்பிடுவதற்காகவும் மக்கள் வருகின்ற ஒரு இடம் என்று அங்கு சென்ற பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று விட்டேன். நண்பனின் இசைக்குழு உறுப்பினர்களில் சிலர் எனக்கு முன்னரே அறிமுகமானவர்கள் தான். அவர்களில் இங்கிலாந்துகாரர்கள் இருவர். இங்கேயே வேலை காரணமாக தங்கி வாழ்பவர்கள். இவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது குழுவின் மேனேஜர் பாவ்ல் என்னிடம் வந்து ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார். நிகழ்ச்சிக்கான கட்டணத்தை வசூலிக்கும் பெண் திடீரென்று வர முடியாத காரணத்தால் அவர்களுக்கு உதவி தேவைப் படவே அவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்னிடம் உதவி கேட்டு வந்து விட்டனர். எனக்கு மனதிற்குள் கொஞ்சம் பயம் என்றாலும், சரி பார்ப்போமே என்று ஒத்துக் கொண்டுவிட்டேன். இசைக் குழுவினர் அனைவருக்கும் நான் ஒத்துக் கொண்டதில் மகிழ்ச்சி.

வேலை ரொம்ப சுலபம். டிக்கட்டுக்கான பணத்தை வாங்கிவிட்டு புத்தகத்தில் கோட்டிட்டுக் குறித்துக் கொள்ள வேண்டும். பணம் கொடுத்தவர்களின் கையில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி விட வேண்டும். இவ்வளவு தான்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பிக்க வேலையைத் தொடங்கி விட்டேன். உணவகம் முழுதும் மக்கள் கூட்டம். நல்ல வருமானம் இசைக் குழுவினருக்கும். வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போதே காபி, தண்ணீர், French Fries, Potato Puree, Salad என எனக்கான உணவு மேசைக்கு வந்து கொண்டே இருந்தது. Jazz இசையை ரசித்துக் கொண்டும் உணவை சுவைத்துக் கொண்டும் வேலையைப் பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. இப்படி உட்கார வைத்து சாப்பாடு போடுகின்றார்களே என்று நினைத்த போது இந்த வருடம் பினாங்கு தைப்பூசத்தில் கலந்து கொள்ளவில்லையே என்ற கவலையும் நீங்கியது. (எங்கள் ஊர் தைப்பூசத்தில் தண்ணீர் மலைக் கோவில் முருகனுக்கு காவடி எடுப்பது மாத்திரம் பிரபலம் அல்ல. அங்கு கட்டியிருக்கும் தண்ணீர் பந்தல்களில் மக்களை வரவேற்று உபசரித்து உணவு வழங்குவார்களே அது தான் ரொம்ப ரொம்ப பிரபலம்)
5 Comments:

At Sunday, January 30, 2005 12:15:00 PM, Blogger அன்பு said...

வாங்க... சுபா, வாங்க, வாங்க.

பியர், பியர், பியர் என விதம் விதமான பானங்களையும்
வழக்கம்போல கலக்குங்க...:)

 
At Sunday, January 30, 2005 4:45:00 PM, Blogger மதி கந்தசாமி (Mathy) said...

vaangka vaangka!

 
At Sunday, January 30, 2005 9:55:00 PM, Blogger Balaji-Paari said...

I think this is the season of returns...
Welcome...wellcome....

 
At Monday, January 31, 2005 6:05:00 PM, Blogger Suba said...

நன்றி..! நன்றி..! மீண்டும் வலைப்பூ உலகில் உலா வருவதில் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

 
At Tuesday, February 01, 2005 11:32:00 AM, Blogger enRenRum-anbudan.BALA said...

என் "சன் டிவியின் பக்தித் தொடர் - 'ராஜ ராஜேஸ்வரி'!" பதிவுக்கான தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் சிறிது காலம் ஒதுங்கியிருந்து விட்டு மீண்டும் தமிழ்ப் பதிவுகள் உலகத்திற்கு திரும்பியிருக்கும் OLD TIME BLOGGER என நினைக்கிறேன்! உங்கள் மறுவரவு நல்வரவு ஆகுக!
என்றென்றும் அன்புடன்
பாலா

 

Post a Comment

<< Home