S.M.S எம்டன் 22-10-1914
S.M.S எம்டன் 22-10-1914 நூல் விமர்சனம்
நூலாசிரியர் திவாகர் விசாகப்பாட்டினம்
நூல் விமர்சனம் என்பது நூலை படிக்கின்ற வாசகனுக்கு அளிக்கப்படுகின்ற ஒரு சுதந்திரம் என்று நான் கருதுகிறேன். படிக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு நூலை பல்வேறு கோணங்களில் காண்பதற்கும் உணர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஒரு நூல் தரும் தாக்கம் என்பது பல்வேறு வகைப்படும். வாசித்து பல நாட்கள் ஆகிய பின்னரும் மனதில் ஏதாவது ஒரு வித தாக்கத்தை ஒரு நூல் அளித்தால் ஒரு வகையில் அதனை எழுதிய நூலாசிரியர் வெற்றி பெற்றவராகின்றார். சிறந்த படைப்புக்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை விமர்சனப் பார்வையோடு அலசி அறிமுகப் படுத்துவது ஒரு வித சமுதாயப் பணியும் கூட. இது நூலை வடிக்கின்ற அந்த சிற்பிக்கு தனது படைப்பு எவ்வகை தாக்கத்தை வாசகர்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது என்ற ஒரு கணிப்பை நிச்சயமாக வழங்கும்.
நூலை படிக்கும் போது அதில் கிடைக்கின்ற புரிதலை விட அதனை ஆய்வு செய்ய வேண்டும் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வாசிக்கும் போது எனது அறிவுப் பாதையும் விசாலமடைவதை நான் உணர்கிறேன். பல நூல்களை நான் வாசிக்கின்றேன். அதில் சில எனது மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன. நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகள், குறுந்தொடர்கள் சில கவிதைகள் - இவற்றில் அடக்கம்!
நாவல்களில் பல வகை உண்டு. அதில் வரலாற்று உண்மையைக் சிறிது கற்பனையோடு கலந்து வழங்குவதில் குறிப்பிடத்தக்கவராக விளங்குகின்றார் திவாகர். இவரது திருமலைத் திருடனை படித்தபோது இவரது முயற்சி சாதாரண ஒன்றல்ல என்ற உண்மை புலப்பட்டது. இப்போது புதிதாக பிறந்துள்ள இவரது வரலாற்று நாவல் "S.M.S எம்டன் 22-10-1914" இந்த அற்புதமான எழுத்தாளரை கொண்டிருப்பதில் தமிழ் எழுத்தாளர் உலகிற்கு பெருமையைச் சேர்த்திருக்கின்றது என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு கதையை எழுதும் போது அன்றாட வாழ்க்கையை சித்தரிப்பதாக கதை போக்கு அமைந்திருந்தால் அதில் நூலாசிரியருக்கு நிறைந்த சுதந்திரம் இருக்கும் - தனது கற்பனையை படைப்பாக மாற்ற! வரலாற்று நாவல் என்னும் போது அதில் இந்த சுதந்திரப் போக்கு இல்லாமல் ஆய்வுக்கு நிச்சயமாக இடமளித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதை மீறும் போது அது வரலாற்று நாவலாக அல்லாமல் ஒரு கதை என்ற வட்டத்திற்குள் விழுந்து விடும். வரலாற்று நாவல் என்ற அந்தஸ்து கிடைக்காது. இது ஒரு சிக்கல்.
இந்த நாவலுக்கு மேலும் ஒரு சிறப்பு கடலோடி நரசய்யாவின் அணிந்துரை. சிறந்த வரலாற்று நூலாசிரியரை நூலை அலசி அணிந்துரை வழங்க வைத்திருக்கின்றார் திவாகர். அணிந்துரையே இந்த நூலுக்கு சிறந்த ஒரு அறிமுகமாகவும் அமைந்து விடுகின்றது.
இந்த நூலை வெவேறு அங்கங்களாகப் பிரித்து சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அந்த எண்ணத்தை மனதில் கொண்டு எனது இந்த நூலைப்பற்றிய சிந்தனை ஓட்டத்தை செலுத்தியிருக்கின்றேன். முதலில் என்னை கவர்வது கதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டுள்ள கரு.
இது தற்போதை பல தமிழ் நாவல்களிலிருந்து மாறுபட்ட கரு. நடந்த உண்மைகளோடு கற்பனை கலக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு முக்கிய விஷயங்கள் எடுத்தாளப்பட்டிருகின்றன. ஒன்று S.M.S எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் அந்நாளில் இந்து மகாக் கடலில் ஏற்படுத்திய தாக்கம். மற்றொன்று சைவ பாரம்பரியம் மற்றும் சோழ மன்னனின் பரம்பரை பற்றிய செய்திகள். இரண்டும் எப்படி கலக்கின்றன? அதிலும் 1914ம் ஆண்டு வாக்கில் இது எப்படி ஒரே நேரத்தில் குறிப்பிடப்பட முடியும் என்ற கேள்வியை தகர்த்து கதையை நேர்த்தியாக கொண்டு செல்கிறார் திவாகர்.
இந்த நாவலில் சில குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. சிதம்பரம் பிள்ளை,கந்தசாமி, ராதை, நோபிள், கமாண்டர் மிக்கே, காப்டன் மூல்லர், தம்பிரான் சுவாமிகள் ஆகியோருக்கு கனமான பாத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களோடு மேலும், டி.ஐ.ஜி.லாங்டன், லகுளீசப் பண்டிதர், சிவபாதசேகரராக தன்னை மாற்றிக் கொண்ட இராஜராஜ சோழன், இராஜேந்திரன், மச்சு சிரேட்டியார், தம்பிரான் சுவாமிகள், சிற்றம்பல நாடிகள், சிதம்பரம் பிள்ளை, முத்து எனப் பலரது கதாபாத்திரங்களும் இந்நாவலைஆக்கிரமிக்கின்றன.
கதையில் ஆங்காங்கே சரித்திர நிகழ்வுகளின் குறிப்புக்கள் சேர்க்கப்பட்டிருப்பது இந்த நாவலுக்கு வலுவைச் சேர்க்கின்றது. அதே சமயம் வாசகர்களுக்கு எந்தப் பகுதி சரித்திர உண்மை எந்தப் பகுதி கற்பனை என்பதை பிரித்து அறிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுத்தும் என்பதும் உறுதியாகின்றது. இந்த நாவலைப் படிக்கின்ற ஒரு வாசகன் நிச்சயமாக மேலும் இது தொடர்பான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளதால் சிந்தனைக்கும் பொது அறிவுத் தேடலுக்கும் இது ஒரு சிறந்த படைப்பு என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
திவாகரின் ஆழமான சைவ சமையப் பற்று இந்த நாவலில் நன்றாகவே வெளிப்படுகின்றது. சைவ பாரம்பரியம், சந்தான குருமார்களின் விபரங்கள், சிற்றம்பல நாடிகளின் சாம்பவ விரத நிகழ்வு அதனோடு ஒட்டிய சித்தர் காட்டு நிகழ்வுகள், கதை மாந்தர்கள் பிரச்சனை என்று வரும் போது சிவனை மனதில் உறுதியாக நினைத்து இறைவன் அருள் வேண்டி நிற்பது போன்ற இடங்களில் தனது பக்தியையும் வெளிக்காடிக் கொள்கின்றார் திவாகர்.
ராதையோடு காதல் கொண்டு அவளை மனதால் பிரியாமல் இருக்கும் சிதம்பரம் நோபிளின் பால் கொள்ளும் சலனம் ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கின்றது. கதாசிரியர் இந்த உயர்ந்த பாத்திரத்தின் இந்த செயலை நியாயப்படுத்துகின்றாரோ என்ற நோக்கத்தோடு வாசித்துக் கொண்டு வரும் போது ஒரு கட்டத்தில் இந்த சலனமும் தவறு என்பதை சுட்டிக் காட்டுவதிலும் கதாசிரியர் தவறவில்லை. இது மனதிற்கும் நிறைவாக அமைந்து விடுகின்றது.
இந்த நாவலில் கடல் பயணத்தின் போது சீனன் என்ற ஒரு கதாப்பத்திரமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. கதை முழுக்க இந்த சீனர் சீனராகவே வருகிறாரே தவிர மற்றவர்களுக்கு உள்ளது போல இவருக்கு ஒரு பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனை தவிர்த்து இவருக்கும் ஒரு பெயரை வைத்திருக்கலாம்.
சில இடங்களில் ஜெர்மானிய வார்த்தைகளின் கலப்பு கதையோடு சேர்ந்து வருவதும் ஒருவித அன்னியப்போக்கை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக " டாக்டர்.. நிச்சயமாக டங்கே சொல்ல வேண்டும்" என்பது போன்ற இடங்களில் வற்புறுத்தி மொழிக் கலப்பு செய்யப்பட்டுள்ளது போன்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனாலும் இது ஒரு பெரிய குற்றம் அல்ல. எப்படி நமது அன்றாட தமிழ் பேச்சு மொழி பயன்பாட்டில் ஆங்கிலம் கலந்த தமிழ், மலாய் கலந்த தமிழ் என்று வருகின்றதோ அதே போல இது ஜெர்மன்(டோய்ச்) மொழி கலந்த ஒரு தமிழ். இது எனக்குப் புதிதுமல்ல. ஜெர்மனியில் இரண்டாவது தலைமுறைத் தமிழர்கள் இப்படித்தானே தமிழை பேசி வருகின்றனர்! இந்த ஜெர்மன் மொழி அதாவது டோய்ச் மொழி கலந்த தமிழ் ஒரு வகையில் ஜெர்மனியில் தமிழ் மக்களிடையேயான பேச்சு வழக்கில் அன்னியமற்றதாகி விட்ட நிலையில் இதனை நூலிலும் கலந்து பார்ப்பதில் இது ஒரு பெரிய குற்றமாக என்ணத்தோன்றவில்லை.
இந்த நூலில் மேலும் ஒரு சிறப்பு இருக்கின்றது. கேப்டன் மூல்லர், மிக்கே மற்றும் ஜெர்மானிய வீரர்களின் பழக்க வழக்கங்களை விவரிக்கும் அழகு என்னை மிக்கவும் ஆச்சரியப்படுத்தியது. நான் அனுபவத்தில் வியந்து போற்றும் ஜெர்மானியர்களின் சில சிறப்பான பண்பு நலன்களை இவர் இந்த நூலில் தக்க சந்த்தர்ப்பங்களில் கையாண்டிருப்பது இந்த நூலுக்காக திவாகர் மேற்கொண்ட திறமான ஆய்வினை வெளிக்காட்டுகின்றது.
நாவலைப் படிக்க படிக்க எத்தனையோ புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த சிறந்த போர்கப்பல், தான் பயணித்த கடல் பாதையில் நிகழ்த்திய சாகசங்கள், அடைத்த வெற்றிகள் போன்றவற்றைப் படித்து கொள்ளும் போது முந்தைய சரித்திரத்தின் பெருமையை உணர முடிகின்றது. இந்த நாவலை படித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்செயலாக வேரொரு நூலில் 13ம் நூற்றாண்டு ஜெர்மன் வரலாற்றைப் பற்றி படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரை படத்தில் ஜெர்மனியின் வடக்குப் பகுதில் இருக்கும் எம்டன் என்ற ஒரு பிரசித்தி பெற்ற நகரத்தைப் பற்றி இந்த நூல் குறிப்பிட்டிருந்தது. வலைப்பக்கங்களில் தேடிய போது இந்த நகரத்தைப் பற்றிய மேல் விபரங்களை மேலும் தெரிந்து கொள்ள முடிந்தது. நெதர்லாந்துக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்கரை நகரம் எம்டன். விக்கிபீடியாவில் எம்டன் நகரம் 8ம் நூற்றாண்டு தொடக்கம் அமைப்புற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அமுதோன், எம்டா, போன்றயவை இந்த நகரத்திற்கு வழங்கி வந்த பிற பெயர்கள் என்றும் 17ம் நூற்றாண்டு வாக்கில் இந்த நகரம் மிகப் பிரசித்தி பெற்ற வளம் கொழிக்கும் நகரமாக இருந்துள்ள செய்தியையும் வலைப்பக்கங்களின் வழி அறிய முடிகின்றது. டச்சுக் காரர்களில் பலர் இங்கு குடிபெயர்ந்துளளனர். ஆனால் இரண்டாம் உலகப்போரின் சமயம் இந்த நகரம் ஏறக்குறைய முற்றிலும் அழிக்கப்பட்டது ஒரு கொடூரம். உலகப் போர் காலங்களில் 3 கடற்படை கப்பல்கள் இந்த நகரின் பெயரைக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு முதலாம் உலகப்போரிலும் மற்றொன்று 2ம் உலகப் போரிலும் ஈடுபட்டது. தற்சமயம் கூட இந்த நகரின் பெயரைத் தாங்கிய ஒரு கடற்படை கப்பல், ஜெர்மானிய கடற்படையில் உள்ளதாகவும், 1980ல் கட்டப்பட்டு 1983ல் கடற்படைச் சேவையில் இந்தக் கப்பல் சேர்க்கப்பட்டதாகவும் விக்கிப்பீடியா மேலும் விவரிக்கின்றது.
நாவலில் உள்ள மற்றொரு சிறப்பு, ராதை மிகத்துணிச்சலாக மேற்கொள்ளும் ஆய்வுகள். சுவாரசியமான அவளது அனுபவங்கள் அதற்காக அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன. ராதையின் இந்த ஆய்வுகளுக்குப் பின்னால் ஒரு சுயநல காரணம் இருந்தாலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே தனது உலகத்தை கண்டு வந்த பெண்கள் மத்தியில் இப்படியும் ஒரு தமிழ் பெண் துணிச்சலாக செயலாற்றினாள் என்று சொல்வது வித்தியாசமான ஆனால் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயமே. இதற்காகவும் திவாகரை பாராட்டலாம்.
பொதுவாகவே திவாகரின் நாவல்கள் தனது தனிச்சிறப்பை வெளிக்காடிக் கொள்வதில் தவறியதில்லை. திருமலைத் திருடனை முதன் முதலில் படிக்க நேர்ந்த போது வாசிப்பதை நிறுத்தமுடியாமல் ஒரு தீவிரத்தோடு படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது. அந்த உணர்வு இந்த நூலிலும் குறையவில்லை. ஒரு வகையில் இந்த நாவல் மேலும் அதிகமான ஆர்வத்தைத் தருவதாகவே உள்ளது. ஒரு நாவல் ஏதாவது ஒரு வகையில் ஒரு வித ஆழமான சிந்தனைத் தேடலை, விஷய ஞானத்தை வழங்க வேண்டும் என்பதில் நான் அக்கறையாக இருப்பேன். இது என்னுடை தனிப்பட்ட எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பினை இந்த நாவல் ஏமாற்றவில்லை. திவாகரின் சிறந்த ஒரு படைப்பு இது. வாங்கிப் படிக்கும் வாசகனை இந்த நாவல் நிச்சயமாக ஏமாற்றாது.