Sunday, February 27, 2005

ஆஷாடபூதி.... ????

சில நாட்களுக்கு முன்னர் இந்த மாத (Feb) திசைகள் இதழில் திரு.நரசய்யா எழுதியிருந்த மூச்சை நிறுத்திவிடு என்ற தலைப்பிலான சிறுகதையைப் படித்தேன். கடந்த சில நாட்களாக எனது மனதில் இந்தக் கதையைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு உண்மை சம்பவத்தை கதையாக வடித்திருக்கின்றார் திரு.நரசய்யா. அருமையான கதை! கதையை விமர்சிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. இதனை ஒட்டி என் மனதில் தோன்றிய எண்ணங்களைத்தான் இங்கு பதிவாக்க விரும்புகிறேன்.


மனதில் தோன்றுகிற எல்லா எண்ணங்களையும் நம்மால் உண்மையிலேயே எந்த பாகுபாடும் இல்லாமல் ப஡ர்க்க முடிகின்றதா என்பதுதான் கேள்வி. மனிதர்களாக பிறந்த அனைவருமே சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்பட்டவர்களே. ஆனால் அந்த சலனத்தையும் சபலத்தையும் நம்மால் உற்றுப் பார்த்து நானும் தவறு செய்யும் ஒரு மனிதர்தான் என்று நம்மால் சொல்லிக் கொண்டு இந்த நிலையிலிருந்து வெளியேறி நம் அழுக்குப் படிந்த மனத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்ய துணிவு இருக்கின்றதா என்பதும் ஒரு கேள்வி. பொதுவாகவே நமது மக்களிடையே மேற்கத்தியர்கள் என்றால் இரண்டு விதமான பொதுப்படையான எண்ணம் தான் இருக்கின்றது. ஒன்று மேற்கத்தியர்கள் அறிவியல், தொழில்நுட்பம் பொருளாதாரம் ஆகியற்றில் மிக மிக மிக உயர்ந்தவர்கள் என்பது. மற்றொன்று மேற்கத்தியர்கள் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப ஒழுக்கம் ஆகியற்றில் மிக மிக குறைந்தவர்கள் என்பது. வெள்ளைக்காரிதானே, அவளுக்கு உடம்பு தெரியத் தெரிய உடை உடுத்திக் கொள்ளத்தான் தெரியும்; அவர்களுக்கெல்லாம் கணவன் குடும்பம் என்ற பக்தி பண்பாடு எல்லாம் சுத்தமாக இருக்காது, என்று மேம்போக்காக பேசுபவர்கள் பலர் நம்மிடையே உண்டு. இப்படி பிறரை தாழ்வாக சுட்டும் நமது விரல்கள் நமது பண்பாட்டில் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்ட எழுகின்றனவா?

மிகத் துரிதமாக வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்திலும் நம்மிடையே எத்தனையோ தாழ்வான குணங்கள் மனதில் பதிந்திருக்கின்றன, மாற்றம் அடையாமலேயே! ஜாதி என்ற பெயரில் மக்களை பிரித்து வைத்து சொல்லாலும் செயலாலும் துன்பப்படுத்தும் நிலை இன்று மாறி விட்டதா? ஆண் பெண் என்று பேதம் பிரித்து வைத்து ஆலயத்திலும், சடங்குகளிலும் கலாச்சார நிகழ்வுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் குறைந்து விட்டனவா? திருமணம் செய்து கொண்ட பெண்களில் பலர் சுயமாக, சுதந்திரமாக இன்பகரமான வாழ்க்கையை வாழ முடிகிறதா? சுய முடிவு எடுக்கும் சுதந்திரம் இருக்கின்றதா? இந்தக் கேள்விகளெல்லாம் பலர் பல நேரங்களில் கேட்ட கேள்விகள் தான். இவற்றையெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம் ஆனால் வாழ்க்கையில் நமக்கென்று வரும் போது எப்படி செயல்படுகிறோம் என்பது தான் கேள்வி.

மலேசியாவில் இருக்கும் என் தோழி ஒருத்தியோடு சில நாட்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருந்தேன். 6 வருடக் காதல் இப்போது இனிக்கவில்லை. கசக்க ஆரம்பித்துவருகிறது என்று புலம்பினாள். தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கின்றது என்று அழுதாள். இவளது காதல் நிலவரம் இப்போதுத஡ன் எனக்குத் தெரிய வந்தது. அதுவும் நானே வற்புறுத்திக் கேட்ட பிறகுதான் என்னிடம் சொல்ல அவளுக்கு தைரியம் வந்தது. எனக்கு மிகுந்த வருத்தம். "இப்படி நெருக்கமாக பழகும் என்னிடமே இத்தனை நாள் இந்த பிரச்சனையை மறைத்து உனக்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தாயே. உன்னிடம் என்னுடைய எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கின்றேனே. அதில் என்னுடைய சலனங்களும் சபலங்களும் கூட அடங்குமே. இப்படியிருக்க நீ மட்டும் ஏன் என்னிடம் மறைத்து மறைத்து இப்படி ஏமாற்றுகிறாய் என்று மனதில் பட்டதை கேட்டு விட்டேன். அதற்கு அவள் தந்த பதில் இதுதான். "நீ இப்போது மலேசியக்காரி இல்லை. நீ வெளியூர்காரி. உன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை நீ சுலபமாக வெளியிட முடியும். இதனால் உனக்கு உன் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களால் உனக்கு பாதிப்பு ஏற்பட்டாது. ஏனென்றால் அவர்களுக்கு உன்னுடைய சொந்த விஷயம் என்பது உன்னுடைய தனிப்பட்ட விஷயம். உன் மனமும் இந்த வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல அப்படி பக்குவப்பட்டு விட்டது. உன்னால் தைரியமாக பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால் என் நிலமை அப்படியல்ல. என்னைச் சுற்றி உள்ளவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மிக மிக கவனமாக பார்த்து வருகின்றார்கள். இதில் சின்ன தவறு ஏற்பட்டாலும் அதனால் என்னுடைய மானமே போய்விடும். நான் மறைத்து மறைத்து தான் வாழ முடியும். இல்லாவிட்டால் இந்த சமூகத்தில் என்னுடைய பெயர் கெட்டுவிடும். காமம் சார்ந்த விஷயம் என்பது மக்களுக்கு பேசி அலசுவதற்கு சுவையான ஒரு விஷயம். அதிலும் மற்ற பெண்களைப் பற்றி பேசுவதென்றால் ஆண் பெண் இருபாலருக்குமே அல்வா சாப்பிடுவது மாதிரி" என்று சொன்னாள். இப்படி சொல்லும் இவள் காதலிப்பது திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவரை.

முதலில் உருகி உருகி காதலித்த இந்த திருமணமானவருக்கு இப்போது தான், தான் செய்வது தவறு என்று புரிய ஆரம்பித்திருக்கிறதாம். அதனால் இந்த உறவை படிப்படியாக முறித்துக் கொள்ளலாமே என ஆலோசனை கூறியிருக்கிறார். இவரை நம்பி, வந்த வரனையெல்லாம் தடுத்துவிட்ட இந்த நாற்பதை எட்டும் பெண் இப்போது தலையில் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சியில் இருக்கிறாள். அவருக்கும் உனக்கும் தெரிந்த நண்பர்களிடம் கூறி பேசிப் பார் என்றேன். "வெளியே சொல்லமுடியாது சுபா. அவரை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். என்னுடைய பெயர் தான் கெட்டுப் போகும். சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் சேலைக்குத்தான் பாதிப்பு. அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் நான் வாழ்கிறேன்" என்றாள் என் தோழி.

என்ன நியாயம் இது? ஏன் இந்த பாகுபாடு. உண்மையிலேயே நமது சமுதாயம் இந்த பாகுபாட்டை ஆதரிக்கின்றது என்றால் இது ஒரு குறையுள்ள சமுதாயம் தான். பண்பாட்டில் நாம் உயர்ந்தவர்கள் என்று பேசுகின்றோம். எப்போது இம்மாதிரியான மனித பாகுபாடு, ஜாதி பாகுபாடு, ஏற்றத்தாழ்வு எல்லாம் நமது மக்கள் சிந்தனையிலிருந்து ஒழிகின்றதோ அப்பாதுதான் நாம் பண்பாட்டில் உயர்ந்தவர்களாக நம்மை கருதமுடியும். நமது மனதில் உள்ள அழுக்கான சிந்தனைகளை வெளியே காட்டாமல் வெற்றிகரமாக மறைத்து வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வாழ்க்கையில் நிகழ்கின்ற சிறிய சிறிய பிரச்சனைகளையும் பேசி பேசி அவர்களைத் துன்பப்படுத்துவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருகின்றது. இதையெல்லாம் யோசிக்கும் போது என் தோழிக்காக மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை!

1 Comments:

At Monday, February 28, 2005 5:38:00 AM, Blogger meenamuthu said...

சுபா நல்ல பதிவு! நல்ல கேள்வி?
பதில் சொல்வதுதான் சிரமம்.

யாருமே நேர்மையானவர்கள்
இல்லையென்றுதான் சொல்வேன்

anbudan
meena

 

Post a Comment

<< Home