தேசிய காற்பந்து விளையாட்டு ஊழல்
தமிழகத்தில் எப்படி கொலை செய்திகள் தற்பொழுது தொலைகாட்சிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனவோ அதே போல உள்நாட்டு ஜெர்மானிய தொலைகாட்சி செய்தி நிறுவனங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்து விட்டது தற்போதைய காற்பந்தாட்ட ஊழல் விவகாரம். காற்பந்து விளையாட்டு என்பது ஜெர்மானியர்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். அதிலும் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தேசிய காற்பந்தாட்ட போட்டி (Bundesliga) என்பது எல்லா தரப்பு மக்களிடையேயும் பெருத்த வரவேற்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வு. அடுத்த ஆண்டு உலகப் பந்தயத்தை ஏற்று நடத்தவிருக்கும் ஜெர்மனி தனது இளம் காற்பந்து வீரர்களையும் மக்களுக்கு இந்த போட்டியின் வழி அறிமுகப்படுத்துகின்றது என்றே சொல்லலாம். தமிழகத்தில் ரஜினிகாந்த் விஜய் போன்றவர்களுக்கு இருப்பது போன்ற வரவேற்பு இங்கு ஓலிவர் கான், மிஷயல் பாலாக், குரானி போன்றவர்களுக்கு இருக்கின்றது என்றால் எந்த அளவுக்கு மக்கள் இந்த விளையாட்டின் மேல் பற்று வைத்திருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி பரபரப்பாகி இருக்கும் விஷயம் இந்த தேசிய காற்பந்து விளையாட்டில் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் ஊழல் விஷயம். கடந்த வார ஆரம்பத்தில் பெரும் அளவில் லஞ்சம் வாங்கிய விளையாட்டு வீரர்கள், மற்றும் ரெப்ரி ஆகியோரின் பெயர்களை காவல்துறை வெளியிட்டது. இவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைவரும் தகுந்த தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த காற்பந்து ஊழலை துருவி ஆராய்ந்து வரும் காவல்துறையினர், இதில் ஐரோப்பிய அளவில் மாபியா தொடர்புடைய ஊழல் திட்டங்கள் இருக்கும் என்று நம்புகின்றனர். பெரும் அளவில் பணத்தை வாரிக் குவிக்கக்கூடிய காற்பந்து விளையாட்டில் இம்மாதிரியான அநாகரிகமான விஷயங்கள் எப்படியோ புகுந்து விடுகின்றன. ஜெர்மனியைப் பொறுத்தவரை இம்மாதிரியான விஷயம் நடப்பது இது இரண்டாவது முறை. 34 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற பந்தயம் நிர்மானிக்கும் ஊழல் ஜெர்மனியை கலக்கியது. புகழ்பெற்ற பீலபெல்ட் நகர குழு அப்போது இந்த "நல்ல" செயலைச் செய்து பெறும் புகழ் பெற்றது. இப்போது பாடர்போன் குழு.
இந்த நிலைத் தொடர்ந்தால் காற்பந்தாட்ட வீரர்கள் மேல் பொது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என்பது உண்மை. அதிலும் அடுத்த ஆண்டு உலகக் காற்பந்தாட்ட விளையாட்டு நடக்க இருக்கும் வேளையில் உலகம் முழுதும் ஜெர்மனியை நோக்க ஆர்ம்பிக்கும் போது ஜெர்மானிய காற்பந்து விளையாட்டு வீரர்கள் கட்டுப்பாட்டை மேற்கொண்டு நல்ல பெயரை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.
0 Comments:
Post a Comment
<< Home