Saturday, February 19, 2005

வந்தது பிரச்சனை!

கடந்த ஒரு வருடமாக நான் ஸ்டுட்கார்ட் நகரத்திலுள்ள விநாயகர் ஆலயத்தில் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இசை தம்பதியர். கணவர் வயலின் கற்றுக் கொடுக்க மனைவி வீணையும் வாய்ப்பாடும் சொல்லித் தருகின்றார். இதுவரை வகுப்பு மிக நன்றாக நடந்து கொண்டுதானிருந்தது. ஏறக்குறைய 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் வகுப்புக்குச் சென்ற போது ஆசிரியர் தம்பதிகள் வகுப்புக்களை நிறுத்தப்போவதாக சொன்ன போது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் இது தான்.

முதலில் ஸ்டுட்கார்ட் நகரில் ஒரு விநாயகர் ஆலயம் இருந்தது. நிர்வாகத்தில் ஏற்பட்ட பூசலில் இந்த ஆலயம் இரண்டாகப் பிரிந்து மூலவிக்ரகத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர் ஒரு குழுவினர். அதன் பிறகு தொடக்கத்திலிருந்து இந்த ஆலயத்தை ஆரம்பித்து நடத்தி வருபவர்கள் இந்தியாவிலிருந்து சுவாமி சிலைகளை வரவழைத்து, ஒரு கட்டிடத்தின் 2ம் தளத்தில் இந்தக் கோயிலை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். மூலவிக்ரகத்தை எடுத்துச் சென்ற மற்றொரு குழுவினர் இந்த கோயில் இருக்கும் இடத்திலிருந்து 15 கிமீ தூரத்திலேயே இன்னொரு ஆலயத்தை அமைத்து அதனை பராமரித்து வருகின்றனர். இரண்டு ஆலயங்களுக்கும் ஒரே பெயர். ஒரு ஆலயத்திற்குச் செல்பவர்கள் மற்ற ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்பது மாதிரியான எழுதா சட்டம் வேறு. ஆக ஒரு ஆலயத்தில் இசை வகுப்பு நடப்பதால் மற்ற கோயிலுக்குச் செல்பவர்கள் இந்த இசை வகுப்பில் கலந்து கொள்ளமுடியாத நிலை. படிப்படியாக வந்து கொண்டிருந்த 30 மாணவர்களில் பலர் நின்று விடவே இப்போது 10 மாணவர்கள் மட்டுமே ஆசிரியர் குடும்பத்திற்கு மிஞ்சியிருக்கின்றனர்.
இந்த வகுப்புக்களின் வழி தான் அவருக்கு மாத வருமானமே. இப்படிப் பட்ட நிலையில் இவர்கள் என்ன செய்ய முடியும்?


ஜெர்மனியில் பொதுவாக மூலைக்கு மூலை Volkshochschule எனப்படும் கல்விக் கூடங்கள் இருக்கின்றன. பொதுவாக இங்கு ஜெர்மானிய, ஆங்கில, ப்ரெஞ்சு போன்ற மொழிகளோடு மற்ற ஏனைய இசைக் கருவிகள் வாசித்தல், சமையல், தையல் கலை, கைவினைப் பொருட்கள் செய்யும் கலை போன்றவற்றிற்கான வகுப்புக்களும் நடக்கின்றன. ஆக எங்கள் இசை ஆசிரியரிடம் இந்த Volkshochschule மாதிரியான பள்ளிகளில் பதிந்து கொண்டு வகுப்புக்களை நடத்த ஆரம்பிக்க வேண்டியது தானே. தமிழர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவரும் சேர்ந்து படித்து தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்குமே என்று சொல்லிப் பார்த்தேன். அதற்கு அவர் கூறிய பதில் வேதனைக்குறியது.


இப்போது 30EUR ஒரு மாணவருக்குக் கட்டணம் விதிக்கிறோம். அதையே அங்கே செய்ய முடியாது. ஏனென்ற஡ல் குறைந்த பட்சம் 50EUR கட்டணம் வசூலிக்க வேண்டும். மற்ற இனத்தவர் நடத்தும் வகுப்புக்களின் சராசரி கட்டணம் இப்படித்தான் இருக்கின்றது. அதோடு இந்த வகுப்புக்களை நடத்த இடம் தருவதால் பள்ளி நிர்வாகத்தினருக்கும் குறைந்த பட்சத் தொகையாக (ஏறக்குறைய 100 அல்லது 200 EUR ) தரவேண்டியிருக்கும். 50க்கு கட்டணத்தை உயர்த்திவிட்டால் இப்போது வருகின்ற தமிழ் மாணவர்கள் கூட அப்போது வரமாட்டார்கள். 50 EUR என்பது மிகப்பெரிய தொகையாகிவிடும். வகுப்புக்களைத் திறமையாக சிறப்பாக நடத்த Volkshochschule பள்ளிகளில் நடத்துவது தான் சிறந்தது. ஆனால் இது எங்களுக்கு ஒரு விஷப்பரீட்சையாக முடிந்து விட்டால் எங்களுக்குத்தான் பிரச்சனை" என்று சொல்லி வருந்தினார்.


ஆக இரண்டு பிரச்சனைகள் இங்கு முன் நிற்கின்றன.

1. பிளவு பட்டுக் கிடக்கும் ஸ்டுட்கார்ட் தமிழ் மக்களால் பரிதாபமாக இந்த இசை வகுப்பு பாதியிலேயே நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்பது.
2. தெய்வீக அனுபவத்தை ஈட்டித் தரும் இசையைக் கற்றுக் கொள்ள பணத்தை ஒரு காரணமாகக் காட்டி வகுப்புக்களுக்கு வராமல் நின்று விடுவதா என்பது.

நல்ல பண்புகளையும் நல்லனவற்றையும் தூரத்தள்ளி வைத்து வெறுப்பை வளர்த்துக் கொள்வதால் யாருக்குப் பயன்? தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விதண்டாவாதப் போக்கினால் யாருக்கும் நண்மை ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இழப்புக்கள் தான் அதிகரிக்கின்றன!

Thursday, February 17, 2005

ஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் VIP

1989ல் ஹெல்முட் கோல் அவர்கள் சேன்சலராக இருந்த பொழுது, இப்போதைய அமெரிக்க அதிபரின் தந்தை புஷ் ஜெர்மனிக்கு சிறப்பு விஜயம் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஜெர்மானிய மக்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் வருகின்ற 23ம் தேதி ஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் புஷ் எப்படிப்பட்ட வரவேற்பை பொதுமக்களி
டமிருந்து பெற்றுக் கொள்ளப்போகிறார் என்பது இப்போது ஒரு புதிராகத்தான் இருக்கின்றது. BBCயின் ஒரு ஆய்வில் 77% ஜெர்மானிய மக்களின் சிந்தனையில் அமெரிக்க அதிபர் புஷ் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு ஒரு அபாயகரமான ஒன்று என்று அவர்கள் நினைப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் படித்ததாக ஞாபகம்.

இப்போதைய சூழ்நிலையில் பொதுவாக ஜெர்மானிய மக்களுக்கு அமெரிக்க அதிபர் புஷ் மக்களின் மனம் கவர்ந்த ஒருவரல்ல. ஈராக் போர் ஆரம்பித்த காலம் தொட்டு இந்த மனப்போக்கு பெரிதாக வளர்ந்து வந்திருக்கின்றது. பொதுமக்கள் மட்டுமன்றி அரசாங்கத் தலைவர்களும் புஷ்ஷுக்கு எதிர்ப்பான தங்கள் அபிப்ராயங்களையே முன் வைத்து செயல்பட்டனர், அச்சமயத்தில். போர் ஆரம்பித்த பின்னர் சிலமுறை இரண்டு நாடுகளின் அரசியல் தூதுவர்களிடையே பல சமாதான தூது போகும் நிகழ்வுகள் நடந்தன. கடந்த ஆண்டு ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் பிஷர் அமெரிக்கா சென்று வந்தததும் இந்த முக்கிய நோக்கத்தோடுதான். ஆனாலும் பெரிதாக எந்த பலனும் கிடைத்தபாடில்லை. இதற்கிடையே ஜெர்மனியின் மிகப் பிரபலமான ஒரு எதிர்கட்சியின் தலைவியான அங்கேலா, புஷ்ஹுக்கு சாதகமாக பல வேளைகளில் தனது அபிப்ராயங்களை வெளியிட்டிருக்கின்றார். மிக வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய அங்கேலா இப்படி புஷ்ஷுக்குச் சாதகமாகப் பேசுவதை அவருடைய ஆதரவாளர்களில் சிலர் கூட எதிர்த்திருக்கின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பனிப்பேய் விரட்டும் வைபவமான ரோஸன் மோண்டாக் வீதி உலா வைபவத்தின் போது புஷ்ஷையும் அங்கேலாவையும் கேலி பேசும் ராட்ஷச பொம்மைகளையும் ஊர்வலத்தில் சேர்த்திருந்தனர்.



இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது ஜெர்மனிக்கு ஒரு நாள் வருகை மேற்கொள்ளவிருக்கும் புஷ்ஷைப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டுமே என்பதில் தான் பாதுகாப்பு அதிகாரிகள் குறியாக இருக்கின்றார்கள். தொலைக்காட்சி
செய்தியில், ஒரு அதிகாரி குறிப்பிடும் போது, "கிளிண்டண், கோர்பாஷொவ், போப், ரீகன், ஷீராக் என் பல முக்கியஸ்தர்களை வரவேற்றிருக்கின்றோம். ஆனால் இப்போது புஷ்ஷை பாதுகாப்போடு வரவேற்பது தான் எங்களுக்கு வந்திருக்கும் மிகப் பெரிய சவால்" என்று குறிப்பிடுகின்றார்.

23ம் தேதி ப்ராங்பெர்ட்டின் ஒரு பகுதி நெடுஞ்சாலை புஷ் வருகைக்காக மூடப்படவிருக்கின்றது. மிக அழகிய நகரமான மைன்ஸ் நகரைக் கடந்து ரைன் நதிக்கரை ஓரத்தில் இருக்கும் குர்பூர்ஸ்லிஷஸ் அரண்மனையில் புஷ் அரசியல் பிரமுகர்
களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.


அருகாமையில் உள்ள சில பள்ளிகளுக்கும் அன்று விடுமுறையாம். இப்படி ஏகப்பட்ட ஏற்பாடுகள்.